கார் ஓட்டும் சுகமே தனி சுகம்தான்... மனதில் நினைத்துக் கொண்டு ஸ்டியரிங்கை பயங்கர வேகமாக திருப்பினான் பரத். அவனுக்கு வளைவு நெளிவு நிறைந்த பாதைகளில் கார் ஓட்டுவது மிகவும் பிடிக்கும். அதற்காகவே பிரத்யேகமாக இந்த பாதையை பரத் தேர்வு செய்திருந்தான். இருப்பினும் நேரம் அதிகம் இல்லாததால் மனதளவில் ஒரு சின்ன வருத்தம்.

"பால் வாங்க வேண்டும்.... தாமதமாகப் போனால் பால் காலியாகிவிடும். பிறகு என்ன செய்வது?" நினைக்கும் போதே மனதளவில் ஒரு பயம் தொற்றிக்கொண்டது. மேலும் வேகத்தை கூட்டினான்.

இப்போது ஸ்டியரிங்-இல் முன்பைவிட பயங்கர வேகம் காட்டினான். குறுக்கே யாராவது வந்தால் அவ்வளவுதான். கூழ்..கூழ்.. ஆகிவிடுவார்கள். இப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போதே குறுக்கே ஒரு நாய் ஒன்று சாலையைக் கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் பரத்துக்கு ஒரு அலாதி மகிழ்ச்சி. உடனே ஸ்டியரிங்கை நாய்ப் பக்கமாய் திருப்பினான். கார் நேரே போய் அந்த நாயின் மீது ஏறியது. ஏறிய வேகத்தில் நாய் சட்னியாகியது... அந்த நாயின் ரத்தம் கார் கண்ணாடி மேல் தெறித்தது. அதைப் பார்த்த பரத்துக்குள் ஒரு மகிழ்ச்சி உணர்வு ஊடுருவியது. அப்பாடா... என்று பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

உடனே அவன் தோளில் ஒரு கை விழுந்தது.

அலறியடித்துத் திரும்பினான்.

"ஹலோ பாஸ் டைம் ஓவர்..." என்றது அந்தக் கைக்கு சொந்தமான குரல்

"சே! அதுக்குள்ள முடிஞ்சிடிச்சா..." என்று அலுத்துக் கொண்டே அந்த வீடியோ கேம் பார்லரிலிருந்து வெளியேறினான் பரத்.

வெளியே அவனது பழைய சைக்கிள் நின்றுக் கொண்டிருந்தது. அதில் ஏறி ஒரு கையில் பால் கிண்ணத்துடன் ஒரு கையில் சைக்கிள் ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டு கிளம்பினான்.

- - - - - - - - - -

1 comment:

Unknown said...

lolz .... Hareesh ... u really left the reader in a state of tremble .... idhu edhaavadhu vidhiyasamaa irukkum nnu ninaichen lolz but video game nnu mudichadhu was really excellent hehehhe ... continue writing these kinda turning point articles ;-)
Rgds
Vasanth